பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 146 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 326 ஓட்டங்களும் இந்தியா 283 ஓட்டங்களும் பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து 43 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 243 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.
இதனையடுத்து 287 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா இன்றைய 5ம் நாள் போட்டியின் போது 140 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் அவுஸ்திரேலியா 146 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதையடுத்து, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.