இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இலங்கை நெருக்கடியிலிருந்து வேகமாக மீள்வதற்கு காரணமாயிருந்த நீதித்துறையினதும், ஜனநாயக ஸ்தாபனங்களினதும் திறனையும் பாராட்டியுள்ளது. பிரித்தானியாவின் ஆசிய பசுவிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு அமைதி தீர்வை காணும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள மார்க்பீல்ட் தற்போது காணப்பட்டுள்ள தீர்வு, நெருக்கடியிலிருந்து வேகமாக மீள்வதற்கான, இலங்கையின் நீதித்துறையினதும் ஜனநாயக ஸ்தாபனங்களினதும் திறனிற்கு சிறந்த உதாரணம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கையின் நெருங்கிய சகாவாகவும் நட்பு நாடாகவும் விளங்கும் என குறிப்பி;ட்டுள்ள மார்க்பீல்ட் பேண்தகு பதிலளிக்கும் கடப்பாட்டை கொண்ட இலங்கையின் சீர்திருத்தங்கள், பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான அதன் முயற்சி, மற்றும் நல்லாட்சியில் முன்னேற்றம் காண்பது மனித உரிமைகளை பாதுகாப்பது போன்றவற்றிற்கு உதவவும் தயார் எனவும் அமைச்சர் மார்க் பீல்ட் குறிப்பிட்டுள்ளார்.