பிரதமர் நரேந்திர மோடியினால் 2016-ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டத்தால் இந்தியாவின் வளர்ச்சி சுமார் 2 சதவீதம் பாதிக்கப்பட்டதாக அமெரிக்காவை சேர்ந்த அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பண மதிப்பிழப்பு திட்டத்ததின்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
அப்போது பண புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில் இது 86 சதவீதமாகும். திடீரென பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதால் நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. பண மதிப்பிழப்பு திட்டத்தால் ஏற்பட்ட தாக்கம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த தேசிய பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.
இதன்போதே 2016 நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டம் இந்தியாவின் வளர்ச்சியை பாதித்து விட்டது எனவும் அன்றைய கால கட்டத்தில் சுமார் 2 சதவீத வளர்ச்சியை பண மதிப்பிழப்பு பாதித்து இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும் நவம்பர் மாதமும், டிசம்பர் மாதமும் 3 சதவீதம் வரை பாதிப்பு இருந்ததாகவும், அதன் பிறகு பல மாதங்கள் இதன் தாக்கத்தால் பாதிப்புகள் தொடர்ந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சில நீண்ட கால நன்மைகள் கிடைத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது