இலங்கை பிரதான செய்திகள்

நிறைவேற்று அதிகாரத்தை தொடர்ந்து பயன்படுத்துவேன் :


தொடர்ந்து நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் என்றும் தனது ஆட்சி காலம் முழுவதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை மகிந்த ராஜபக்சவுடன் முரண்பாடுகள் ஏதும் இல்லை என்றும் பரந்துபட்ட கூட்டணியில் செயற்படப்போவதாகவும் இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியாது என்ற தனிப்பட்ட கருத்தை தான் இப்போதும் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என்றும் இந்த நேர்காணலில் மைத்திரிபால கூறியுள்ளார். அரசியல் தீர்மானங்கள் காரணமாக  ஜனாதிபதி மைத்திரிமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருப்பது குறித்தும் அவ் ஊடகம் கேள்வி எழுப்பியிருந்தது.

தாம் தெளி்வான மனசாட்சியுடன் இருப்பதாகவும் தேசத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே இலங்கையில் சில முக்கிய முடிவுகளை எடுத்திருந்ததாகவும் அவர் இந் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.  அரசமைப்பை மீறும் தீய நோக்கம் ஏதும் தம்மிடம் இருக்கவில்லை என்றும் அரசியல் நிபுணர்களுடன் கலந்தாலோசித்தே தேர்தல் தொடர்பான முடிவுக்கு தாம் சென்றிருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தது, , வடக்கு கிழக்கு மக்களின் நீண்டகால கோரிக்கையான சுயாட்சி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் தீவிரமடையாதா என்ற கேள்வியையும் இந்துஸ்தான் டைம்ஸ் இதன்போது எழுப்பியுள்ளது.

இதற்குப் பதில் அளித்த ஜனாதிபதி, நல்லிணக்கத்தை பலப்படுத்தும் பணியை எப்போதும் ஆற்றி வருவதாகவும் வடக்கு கிழக்கு மக்களின் துயரங்களை போக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திக்கு தமிழ், முஸ்லீம் கட்சிகள் ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

2 Comments

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • எப்படியோ, ஆலோசகர்களின் அறிவுறுத்தலுக்கமைய, அரசியலமைப்பை மீறாது நடந்துகொண்டால், எல்லாம் நல்லதே! ஆணவம் தலைக்கேறி எதேச்சாதிகாரமாக நடக்க முற்பட்டால், சட்டம் சும்மாய் இருக்காது. மூக்குடைபடப் போவதும் அவரே! சிந்திப்பாரா?

 • ஊழலுக்கு எதிராகப் போராடுவது வேறு. திரு. ரணில் விக்கிரமசிங்கவின் ஊழலுக்கு எதிராகப் போராடுவது என்பது வேறு. திரு. மைத்திரிபால சிறிசேன தெரிந்தெடுத்திருக்கும், ‘திரு. ரணில் விக்கிரமசிங்கவின் ஊழலுக்கு எதிராகப் போராடுவது’, என்பது, தனிமனித விரோதச் செயற்பாடுகள், என்பதை இவர் உணரவில்லை போலும்?
  அதை இவர் உணர்ந்திருந்தால், பாராளுமன்றில் மேலும் 223 பேர்கள் இருக்கையில், ஊழல்க் குற்றச்சாட்டுக்குள்ளான திரு. மகிந்த ராஜபக்ஷவைப் பிரதமராகத் தெரிவு செய்திருக்க மாட்டார்?