இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றசாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட எட்டு மீனவர்களையும் கடுமையான நிபந்தனையுடன் ஊர்காவற்துறை நீதிமன்று விடுதலை செய்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி தமிழகம் , இராமேஸ்வரம் , பாம்பன் மற்றும் ஜெகாதப்பட்டனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என குற்றம்சாட்டி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மறுநாள் நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். அதனையடுத்து நீரியல் வளத்துறையினரால் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
அதனையடுத்து எட்டு மீனவர்களையும் இன்றைய தினம் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், இன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்திருந்தார்.
அதன்பிரகாரம் இன்றைய தினம் நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மீனவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கடற்சீற்றம் காரணமாகவே எல்லை தாண்டினார்கள் என மன்றுரைத்தார்.
அதனை அடுத்து நீதிவான் எட்டு மீனவர்களையும் கடுமையாக எச்சரித்ததுடன், மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டால் ஓர் ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என எச்சரித்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார்.
அதேவேளை மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகுகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி நடைபெறும் எனவும் அன்றைய தினம் படகின் உரிமையாளர் மன்றில் சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.