கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதனால் 11 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டு இம்மாத முற்பகுதியில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டதைத்தொடர்ந்து 36 அடி நீர்கொள்ளளவைக் கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் நேற்று (21) 35 அடியாகக் காணப்பட்;டது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையினால் குளத்தின் நீர்மட்டம் மிக வெகுவாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் இன்று காலை (22) நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாரகன் கருத்துத்தெரிவிக்கையில், அதிகாலை 2.00 மணியிலிருந்து குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்துக்காணப்பட்டது. அதாவது, முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் 370 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைபெய்தததனால் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
இந்தநிலையில், இரணைமடுக் குளத்தில் உள்ள 14 வானகதவுகளில் 11 வான்கதவுகளை உடனடியாக திறந்து விட்டுள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் நீர்ப்பாசனத்திணைக்களத்தினர் காவற்துறையினர் இராணுவத்தினர் குளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.