முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளும் வெள்ளப் பெருக்களினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொடரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விசுவமடு, றெட்பானா, வள்ளுவர்புரம், மாணிக்கபுரம் முதலிய பகுதிகளிர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளை சேர்ந்த 150 குடும்பங்கள் வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலய இடைத்தங்கல் முகாங்களில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு பிரதேசத்தை சேர்ந்த சமூக நிறுவனங்கள் உதவிகள் ஒத்தாசைகளை புரிந்து வருகின்றன. தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதன் காரணமாக இந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்த 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஒட்டுச்சுட்டான், ஒருவக்காடு மற்றும் மாங்குளம் பிரதேசங்களை சேர்ந்த குடும்பங்கள் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதேவேளை குமுழமுனை வீதியின் குறுக்காக காணப்படுகின்ற இரு ஆறுகள் குறித்த மழையினால் பெருக்கெடுத்துள்ளமையால் அப்பகுதியிலுள்ள வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் இவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.