வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கி விழுந்தார் செளபர்ணிகா. சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது. ஆனால், விழுந்த ஒவ்வொரு அடியையும் தனக்கு சாதகமாக மாற்றும் மன உறுதியைப் பெற்றார். இப்போது, நவீன ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார். இவர் திரைப்படங்களிலும் ஆடை வடிவமைப்பாளராக சாதனை செய்து வருகிறார். செளபர்ணிகா பிபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலை இங்கு நன்றியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த சாதனை எப்படி சாத்தியமானது?
“சிறு வயதாக இருக்கும்போது எங்களது குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பாக இருந்தது. கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது (1998) நடந்த கலவரத்தில் எனது அப்பாவின் தங்கப்பட்டறை சூறையாடப்பட்டதை தொடர்ந்து வாழ்க்கையின் திசை மாறியது. வெள்ளி தட்டில் சாப்பிட்டுகொண்டிருந்தவர்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் நிலைக்கு ஆளானோம். இதனால் என் படிப்பும் 10-ஆம் வகுப்போடு நின்று போனது. புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக் கூடம் செல்ல வேண்டிய வயதில் ஹேண்ட்பேக் தூக்கிக்கொண்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்
பாத்திரக்கடை தொடங்கி, பைக் ஷோரூம் வரை சேல்ஸ், மார்கெட்டிங் என நிறைய புதிய விஷயங்கள் அறிமுகமாயின. புதிது புதிதாக நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என மிகவும் ஆர்வமாக கிடைக்கும் வேலைகளைச் செய்வேன். இதனாலோ என்னவோ எந்த ஒரு இடத்திலும் நிலையாக வேலை செய்ய முடியவில்லை.
வறுமை காரணமாக குடும்பம் சிதற ஆரம்பித்தது. அப்பா, அம்மா பிரிவு என்னை மனதளவில் பாதித்தது. வீட்டை விட்டு வெளியேறி சென்னை செல்ல, என் திறமையை அங்கீகரித்தது சென்னை மாநகரம். பள்ளிப்படிப்பை கூட முடிக்காத நிலையில் சென்னையின் முக்கிய நிறுவனங்களில் என்னை வேலை செய்ய தூண்டியது எனக்குள் இருந்த முன்னேற வேண்டும் என்ற உந்துதல் மட்டும் தான்.
300 ரூபாய் முதலீடு செய்தேன்
கைநீட்டி சம்பளம் வாங்கும் நிலையில் இருந்து சொந்தமாக தொழில் தொடங்கினால்தான் அடுத்த கட்டத்தை எட்ட முடியும் என உணர்ந்தேன். 2010 ஆம் ஆண்டு மீண்டும் கோவைக்கு திரும்பி தனியாக தொழில் துவங்க முடிவு செய்தேன். எனது முதல் சாய்ஸ் அட்வர்டைசிங் நிறுவனம்.
ஆசை மட்டும் இருந்தால் போதாது தொழில் தொடங்க பணம் வேண்டுமே. கையில் இருந்த 300 ரூபாய் பணத்தில் 1000 விசிட்டிங் கார்ட் அடித்தேன். தெருத் தெருவாய் அலைந்து 1000 விசிட்டிங் கார்டையும் கொடுத்து முடித்தேன்.
எந்த பண இருப்பும் இல்லாமல், அலுவலகம் இல்லாமல் நான் துவங்கிய முதல் அட்வர்டைசிங் நிறுவனம் அதுதான். ஒரு பள்ளியில் நான் கொடுத்த விசிட்டிங் கார்டை பார்த்து அதே போல் விசிட்டிங் கார்டை அடித்து தர முடியுமா என்று கேட்டார்கள். அதே பிரின்டிங் ப்ரசில் வந்து 300 ரூபாய்க்கு விசிட்டிங் கார்ட் அடித்து 1000 ரூபாய்க்கு விற்றேன். அதுதான் நான் தனியாக தொழில் தொடங்கி லாபம் ஈட்டிய முதல் பணம்.
அதற்கிடையே அட்வர்டைசிங் துறையில் பரிட்சயமான என் தோழியின் நண்பர் ஜான் என்பவரை எனக்கு பிடித்திருந்தது. திருமணமும் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகே ஜானின் உண்மை முகம் தெரியவந்தது.
மதம், தொழில் என எவையெல்லாம் காதலிக்கும்போது ஒரு பொருட்டாக தெரியாமல் இருந்ததோ, அதுவே திருமண உறவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. நான் கருவுற்ற சில மாதங்களிலேயே அவர் என்னைவிட்டு முழுவதுமாக விலகியிருந்தார்.
யூ-டியூப் கற்றுத்தந்த தையல் கலை
என்னுடைய கர்ப்ப காலத்திலேயே எனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். என் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே அவளுக்கான குட்டிக்குட்டி ஆடைகளை தைத்து வைத்தேன். அதற்காக குறைத்த விலைக்கு தையல் இயந்திரம் ஒன்றை வாங்கி தைத்துக்கொண்டிருந்தேன். அதற்கிடையே பெண்களுக்கான பிளவுஸ், சல்வார் போன்ற ஆடைகளையும் தைத்து பழக துவங்கினேன். யூ-டியூப் பார்த்தே அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.
என் குழந்தை பிறக்கும்போது நான் பிளவுஸ், சல்வார் இரண்டிலும் முழுமையாக கற்றுத்தேர்ந்திருந்தேன். நான் ஆசைப்பட்டது போலவே எனக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. என் குழந்தை பிறக்கும்போது கூட என் கணவர் என்னுடன் இல்லை. ஆடைகளை வெளியில் தைத்துக்கொடுக்கும் அளவிற்கு தேர்ச்சி பெற்று இருந்ததால் என் துறையை மாற்ற நினைத்தேன்.
ஆடையில் பெண்களை திருப்திப்படுத்துவது சற்று கடினம் என்றாலும் அதற்காக ஆடை தயாரிப்பில் முழு கவனம் செலுத்தி நுணுக்கமான விஷயங்களை செய்து வாடிக்கையாளர்களை என் பக்கம் ஈர்த்தேன். 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜூன்பெரி என்ற பெயரில் தையல் கடையையை துவக்கினேன்.
தாயும் மகளும் தனியாக
ஒரு கட்டத்தில் என் கணவர் என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்லிவிட்டார். என் மகளின் எதிர்காலம் என்னை அச்சம் கொள்ள வைத்தது. உறவினர்களும் கைகொடுக்கவில்லை. ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்க வேண்டிய நிலை.
ஆறுமாத காலம் உணவுக்கே திண்டாட்டமாக இருந்தது. நான் தேர்ந்தெடுத்த துறையை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த நேரமும் காஸ்டியூம் துறையிலும் மார்க்கெட்டிங்கிலும் சாதிக்க துடித்துக்கொண்டிருந்தேன்.
ஜூன்பெரி நிறுவனத்தில் அனைத்து ஆடைகளும் 6 மாதம் இலவசமாக தைத்துக்கொடுக்கப்படும் என அறிவித்திருந்தேன். பெண்கள் கூட்டம் அலைமோதியது. பிசினஸ் கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கியது. 2017 ஆம் ஆண்டு ஜூன்பெரி ஷோரூமை சிறிய பரப்பளவில் ஆரம்பித்தேன். டெய்லரிங்கை டிசைனிங் லேபாக மாற்றினேன்.
என்னுடைய நுணுக்கமான கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை என் பக்கம் ஈர்த்தேன். உடை அமைப்பு, நிறம், உயரம், எடை என அனைத்தையும் கணக்கில் கொண்டு ஆடைகளை கச்சிதப்படுத்தியது என் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
பின்னர் கோவையில் கிடைக்காத துணி ரகங்களை தாய்லாந்தில் இருந்து இறக்கமதி செய்து கிரியேட்டிவ் கவுன்களை தயாரித்தேன். தற்போது என் ஜூன்பெரி ஷோரூமில் 2000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான கவுன்கள் உள்ளன.
ஃபேஸ்புக் மார்க்கெட்டிங், வாட்ஸ்-ஆப் உத்திகள் என அனைத்தையும் விற்பனைக்கு பயன்படுத்தினேன். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கடையை தேடிவர ஆரம்பித்தார்கள். கடந்தாண்டு மிஸ்ஸஸ் இந்தியாவிற்கான கவுனை நாங்கள் தயார் செய்திருந்தோம்.
திரைத்துறையில் நுழைந்தேன்
பெருநிறுவனங்கள் போட்டியில் இருந்தபோதும் கோவையில் என்னுடைய கவுன்கள் தனித்துவம் பெற்றிருந்தது. இந்நிலையில் ஏன் திரைத்ததுறைக்கு செல்லக்கூடாது என நினைத்தேன். தொடர் முயற்சியின் பலனாக இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சென்னை பயணமானேன்.
திரைத்துறையில் முதல் அடி என்பதால் `ஜகஜால கில்லாடி’ படத்தில் இன்பிலிம் பிராண்டிங் காண்ட்டிராக்ட் செய்து பணியாற்றினேன். அடுத்ததாக திமிரு பிடிச்சவன் படத்தில் நான் தற்செயலாக காஸ்டியூம் டிசைன் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் காஸ்டியூம் டிசைனராக என்னுடைய முதல் படம். அடுத்து தமிழிலில் இரண்டு படத்திற்கும், மலையாளத்தில் ஒரு படத்திற்கும் காஸ்டியூம் டிசைனராக ஒப்பந்தம் செய்துள்ளேன். அதுபோக 4 படங்களுக்கு இன்பிலிம் பிராண்டிங் ஒப்பந்தம் செய்துள்ளேன்.
அழகு என்பது இன்றைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் ஆடைக்கு அதற்கான செலவுகள் அதிகம். ஒரு கச்சிதமான ஆடையை உடுத்துபவர்களுக்கு நடை, பேச்சு, கம்பீரம் என அனைத்தையும் உருவாக்கும்.
அதேபோல் செளபர்னிகா டிசைன் செய்த ஆடையை உடுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அனைவரிடமும் உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். தற்போதும் சரி, ஒருவேளை உணவுக்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போ
என் மகள் 3 வயதிற்குள் அதிக தியாகம் செய்துவிட்டாள். என்னுடைய பயண நேரங்கள் அதிகமாகிவிட்டது. அவள் அப்பா இருந்து என்ன செய்வாரோ அதை விட பலமடங்கு அவளுடைய தேவைகளை பூர்த்தி செய்ய விரும்புகிறேன்.
நல்ல கல்வி, பாதுகாப்பு போன்றவற்றை அவள் பெரியவள் ஆகும் வரை கொடுப்பதற்கான அடித்தளத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இன்னும் 3, 4 வருடங்களில் ஓரிடத்தில் நிலையாக என்னால் நிற்க முடியும். அதன்பிறகு நானும் என் மகளும் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வதற்கு இப்போதைய என் பணி ஒரு அடித்தளமாக இருக்கும்”.
சாதிக்கத் துடிக்கும் ஆற்றலும் தளராத நம்பிக்கையும் சற்றும் குறையாமல் பேசுகிறார், தாயும் நானே தந்தையும் நானே என்று சொல்லுகின்ற செளபர்ணிகா.