கடற்படையை சேர்ந்த இரு உளவாளிகளை காவல்துறையினர் கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பதினொரு இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிக்கு உயிராபத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனக , டொனி ஆகிய இரு உளவாளிகள் நீதிமன்றத்தில் அமர்ந்திருப்பதை அவதானித்த காவல்துறையினர் அவர்களை விசாரணை செய்யுமாறு நீதவானிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைதுசெய்த காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள காவல்துறை அலுவலகத்திற்குள் வைத்து விசாரணை செய்துள்ளனர்.
வெலிசர கடற்படை முகாமில் கடமைபுரியும் குறித்த இரு கடற்படையினரும் எதற்காக நீதிமன்றத்திற்கு வந்தனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இதேவேளை கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்டது உட்பட முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்துவரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி நிசாந்த சில்வாவும் கடற்படையை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் காணப்படுவது குறித்து நீதிமன்றதின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது