தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்திருப்பதாகவும், பின்னால் இருந்து அவர்கள் சுடப்பட்டிருப்பதாகவும் அவர்களது பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ரொய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மே 22ஆம் திகதியன்று தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட பேரணியின் போது வன்முறையை தூண்டியதாக கூறி காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் பிரேதப் பரிசோதனையில் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதன் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், இது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் நேற்றையதினம் வெளியிட்ட செய்தியில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின்போது, 17 வயதான ஸ்னோலின் என்ற சிறுமியின் பின்பக்கத் தலை வழியாகக் குண்டு பாய்ந்து வாய் வழியாக வெளியேறியுள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் எட்டு பேரின் உடலில், பின்புறமாகத் தலை மற்றும் உடல் பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. 40 வயதான ஜான்சி என்ற பெண், கடற்கரை அருகேயுள்ள தனது வீட்டில் இருந்து சில 100 மீட்டர் தொலைவில் சுடப்பட்டுக் கிடந்தார். அவரது காதில் குண்டு பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து, ஊடகத்தினரின் கேள்விகளுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமோ, மாநில காவல் துறையோ இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது