தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகார பகிர்வை தெற்கு மக்களின் ஆதரவை பெற்ற அரசியல் தலைவரினால் மாத்திரமே வழங்க முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தெற்கு மக்களின் ஆதரவை பெற்ற ஒருவரினால் மாத்திரமே முடியுமென்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில், இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை எனவும் எனினும் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நிறைவேற்று அதிகாரத்தினால்தான் நாட்டில் தொடர்ச்சியாக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும் எனக் கூறிய அவர், இதனால், மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கமாட்டோம் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.