வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை இடைமறித்த கொள்ளையர்கள் இருவர் அவரைத் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பி சென்றமை தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த கர்ப்பிணிப் பெண் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது, அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த கொள்ளையர்கள் இருவர் வழிமறித்துள்ளனர். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்றுள்ளார்.
அதனால் கர்ப்பிணிப் பெண்ணின் மோட்டார் சைக்கிளை கொள்ளையர்கள் உதைந்துள்ளனர். அதனால் நிலைதடுமாறி கர்ப்பிணிப் பெண் கீழே வீழ்ந்துள்ளார். அதனைப் பயன்படுத்தி அவர் அணிந்திருந்த தாலிக் கொடியை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண் காயமடைந்தார். அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக மீசாலை உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது எனவும் , அண்மையில் கொள்ளையர் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். எனினும் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதாகவும் அதனால் தாம் அச்சத்துடன் வீதிகளில் பயணிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.