Home இலங்கை சுனாமி என்னும் ஆறாவடு- தொகுப்பு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

சுனாமி என்னும் ஆறாவடு- தொகுப்பு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

by admin
வழமைக்கு மாறான காலநிலை. மேகங்கள் இருண்டு போயிருந்தன. இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவினடுக்கத்தினால் பொங்கியெழுந்த பேரலை இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கியது. தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியது.  அந்தக் கொடுந் துயரம் நடந்தேறி இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் சுனாமியின் வடுக்கள் ஆறவில்லை.
சுனாமி, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மூன்றில் இரண்டு பகுதி கடற்கரை சுனாமியினால் நிர்மூலமாக்கப்பட்டது. வடக்கு கிழக்கு கரையோர மாவட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பின்வருமாறு,
அம்பாறை: 5000
யாழ்ப்பாணம்: 1256
முல்லைத்தீவு: 2902
கிளிநொச்சி: 32
திருகோணமலை: 984
மட்டக்களப்பு: 2975
இலங்கையில் மொத்தமாக 30,196 பேர் சுனாமியால் காவு கொள்ளப்பட்டனர். ஒரு சில நிமிடத்தில் ஊருக்குள் நுழைந்த கடல் உயிர்களை, உடைமைகளை எல்லாம் இழுத்துச் சென்றது. கடல் நீரில் சனங்களின் உடல்கள் மிதந்தன. பலரது உடல்கள் மீட்கப்படவே இல்லை. போரினால் பல பத்து ஆண்டுகளாக உயிரையும் உடைமைகளையும் ஊரையும் இழந்த மக்களை பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையால் ஈழத் தமிரை மிதித்தது ஆழிப்பேரலை.
20,00,00 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 9 ஆண்டு கடந்த நிலையில் சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப் பார்க்கும் நினைவு தினம் இன்று. தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது ஆழிப்பேரலை.
சுனாமி என்பது!
சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை  என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும்.

நிலநடுக்கம்,  மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் “துறைமுக அலை” என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது.

கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.

இம்முறையும் இலங்கையில் இயற்கை பேரழிவில் இறந்தவர்களின் நினைவாக நாளை காலை 9.25 இருந்து 9.27 மணி முதல் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இலங்கை மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.  
 
சுனாமியின் பாதிப்பு வடக்கு கிழக்கில் இன்னமும் தீரவில்லை. சுனாமியில் பெற்றோரை இழந்த பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்த  பெற்றோரும், சகோதரர்களை, நண்பர்களை இழந்தவர்களும் இன்றைய நாளில் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்துவதை காண முடிகின்றது. போரால் மிதிக்கப்பட்டவர்களை சுனாமியும் மிதித்தது. சுனாமியால் மிதிக்கப்பட்டவர்களை மீண்டும் போர் மிதித்தது. இயற்கையை புரிந்து, இயற்கையை வணங்கி, இயற்கையை வென்று எம் வாழ்வை உயிர்ப்போடும் உறுதியோடும் கட்டமைப்போம்.
தொகுப்பு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More