வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு முதலிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. வடக்கின் குறித்த மாவட்டங்களுடன் மேல் மாகாணங்களிலும் இன்றையதினம் கனத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாகவும் மத்திய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மேல் மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாகவும் அதனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.