தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதுவித உடன்படிக்கைகளும் செய்துகொள்ளாவிட்டாலும் அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்போம் என முஸ்லிம் சமய விவகார தபால்துறை அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.
புதிதாக அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்றபின் மல்வத்தை மாகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள சித்தார்த்த தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஞானரத்ன தேரர் ஆகியோர்களை சந்தித்து ஆசி பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வாரத்ததைகள் நடத்திய போதிலும் எந்தவித உடன்படிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடத்த அவர் காணி விடுவிப்பு,அரசியல் சிறைக் கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் குறித்துப் பேசப்பட்டதாகவும் அவை குறிப்பிட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டப்படி சகல அரசியல் கட்சிகளையும் இணைத்து பரந்தளவு கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி தேர்தலுக்கு செல்வதே நோக்கமாக உள்ளது எனவும் இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் கூட இணைத்துக்கொள்ளப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
மேலும் இதற்கு தடையாக காணப்படும் சட்ட சிக்கல்கள் குறித்து பிரதமர் சட்ட உதவிகளை நாடி உள்ளார் எனவும் தேசிய அரசாக இதனை மேலும் முன் எடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக 30 பேரை மட்டுமே நியமிக்க முடியும் என்ற போதிலும் தேசிய அரசானால் 45 வரை உயர்த்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.