சுனாமிப் பேரலை ஏற்பட்டு 14 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று புதன் கிழமை நாட்டின் பல பாகங்களிலும் நினைவு கூறப்பட்டுள்ளது. சுனாமி பேரலையில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை லூசியா ம.வி பாடசாலையில் இன்று புதன் கிழமை காலை 9.25 மணியளவில் தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் உயிர் நீத்த மக்களுக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம் பெற்றன.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சார்வ மதத்தலைவர்கள், மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி சிவசம்பு, மாவட்ட அனார்த்த முகாமைத்து பிரிவின் உதவிப்பணிப்பாளர் திலீபன், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், கிராம அலுவலகர்கள், கிராம மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு உயிர் நீத்த மக்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.