குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்..
வவுனியா நெடுங்கேனி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்டபட்ட காஞ்சூரமோட்டை கிராம மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிராமத்தை சேர்ந்த மக்கள் நெடுங்கேணி மருதோடை அ.த.க.பாடசாலையில் தங்கியுள்ளனர். இந்தக் கிராமத்தை சேர்ந்த 37 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நெடுங்கேணி மருதோடை அ.த.க.பாடசாலை இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு போதுமான நிவாரண வசதிகள் கிடைக்கப்பெறவில்லை என்றும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நெடுங்கேணி மருதோடை அ.த.க.பாடசாலையில் தங்கியுள்ளமையால் இவர்களின் தற்காலிக வீடுகளுக்குள் நுழைந்த காட்டுயானைகள், வீடுகள் மற்றும் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு காட்டு யானைகளும் வீடுகளை உடைத்து ஏற்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இந்த மக்கள் பெரும் துன்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த மக்கள் 1986ஆம் ஆண்டில் காஞ்சூரமோட்டைஎன்ற தமது கிராமத்தை விட்டு, இன வன்செயல்களால் துரத்தப்பட்டார்கள். தமிழ்நாட்டிலும் இலங்கையின் பிறபகுதிகளிலும் அகதிகளாக அலைந்த நிலையில் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மக்களை நெடுங்கேணி பிரதேச செயலகம் மீள்குடியேற்றியுள்ள போதிலும் வனவனத்துறை அதிகாரிகள் இவர்களின் காணிகளை தமக்கு சொந்தமானவை என கூறியுள்ளனர். இந்த சிக்கல் காரணமாக இந்த மக்களுக்கு வீட்டுத்திட்டம் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி கிராமத்தை விட்டு வெளியேற்றும் முயற்சிகளில் சில அரச திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணைப்பாளர் என கூறும் ஒருவரும் இந்த மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில் நிரந்தர வீடு, உட்கபட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் இன்று மழை வெள்ளத்தால் இடம்பெயர்ந்து மீண்டும் அகதிகளாக இடம்பெயர்ந்திருக்க வேண்டிய தேவையும் காட்டு யானைகளின் அழிப்பும் நடந்திராது என இக் கிராம மக்கள் கூறுகின்றனர்.