மேகதாது அணை விவகாரத்தில் சுமுகமான தீர்வு காண தமிழக மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமியிடம் உறுதி அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ள நிலையில் இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதுடன் மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. எனினும் மத்திய அரசின் அனுமதிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நேற்றையதினம் டெல்லியில் மத்திய நீர்ப்பாசனம் மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து பேசிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேகதாது திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து நிதின் கட்காரியிடம எடுத்துரைத்த குமாரசாமி மேகதாதுவில் அணை கட்டுவதால், கர்நாடகத்தைவிட தமிழகத்திற்கு தான் அதிக பயன் எனவும் இதுகுறித்து தமிழகத்திற்கு எடுத்துக்கூறி சுமுக தீர்வு காண தமிழகம் மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் குமாரசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
குமாரசாமியின் இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது