ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ளும் நோக்கம் எதுவும் தற்போது இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெற விரும்புவதாகவும், ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்படும்போது, தேவைப்பட்டால் ஈராக்கில் உள்ள தளங்களில் இருந்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று இரவு திடீரென டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் ஈராக்கிற்குச் சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஈராக்கில் பணிபுரியும் அமெரிக்க படைகளின் சேவை, வெற்றி மற்றும் தியாகம் ஆகியவற்றுக்கு நன்றி சொல்லவே அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.