பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சிறுநீரக நோய் பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் இன்று காலை மாரடைப்பால் திடீரென காலமானார்.
கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் சுமார் 3000-இற்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துவிட்டார். 1989இல் வருஷம் பதினாறு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகியவர். தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய அஞ்சலி, தளபதி படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தலைவாசல், இறைவி, ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவரது நடிப்பில் செக்கச்சிவந்த வானம் வெளியானது.
அத்துடன் மர்மதேசம், மது +2, மதில் மேல் மது போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சீனு மோகன் மறைவுக்கு திரைப்படக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது இறுதிச்சடங்கு 29.12.2018 (சனிக்கிழமை) அண்ணாநகரில் நடைபெறும் என்று கிரேஸி மோகன் தெரிவித்துள்ளார்.