மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அறிமுக ஆண்டிலேயே சர்வதே அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும், இந்திய அளவில் முதல் வீரர் எனும் சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் பும்ரா, 15.5 ஓவர்கள் வீசி 4 மெய்டன் எடுத்து, 33 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் மிகச்சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.
இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அறிமுகமாகியிருந்த பும்ரா அதன்பின் இங்கிலாந்து தொடரிலும், தற்போது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் விளையாடி வருகிறார். இந்த 3 நாடுகளுக்கு எதிராகவும் அறிகமுக ஆண்டிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய அணி பந்துவீச்சாளர் பும்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் அறிமுக ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச அளவில் முதல் வீரர் எனும் பெருமையையும் ஜஸ்பிரித் பும்ரா பெற்று, 39 ஆண்டுகால சாதனையையும் முறியடித்துள்ளார். இந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பும்ரா இதுவரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் கடந்த 1970-ம் ஆண்டு இந்திய வீரர் திலிப் தோஷி அறிமுக ஆண்டிலேயே 40 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது