197
சப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே விடுத்த கோரிக்கைக்கமைய சப்ரகமுவ மாகாணத்திலிருந்து இன்று நேரடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வட. மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சிங்கள மக்களும், தமிழ் மக்களும் இனவாதிகள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் நலன் கருதி சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, அப்பகுதியில் சகோதர மொழி மக்களினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களும் இங்கு வருகைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவரது இந்த சேவைக்காக வடக்கு மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அண்மையில் தென்னிலங்கை இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட போது வடக்கிலிருந்து தமிழ் மக்களினால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் சாதி, மத பேதமின்றி அனைவரும் மனிதாபத்துடன் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Spread the love