பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞானத்தில் மாவட்டத்தில் முதலிடம்!
தற்போது வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி பௌதீக விஞ்ஞானத்தில் யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் சண்முகதாசன் சஞ்ஜித். இவர் தேசியரீதியில் ஆறாமிடத்தையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலை மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்!
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார். நவனீதன் கிருஷிகா என்ற மாணவி தமிழ் மொழி மூலம் வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி 3 A பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவர் தேசிய ரீதியில் 124ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.20614 இஸட் புள்ளியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்!
தற்போது உயர் தரப் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.இந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள பெறுபேற்றின்படி கிளிநொச்சி மாவட்டம் கிளி. முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையினைப் பெற்றுள்ளார்.
திருகோணமலை நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரி மாணவன் எம்.டிலக்சன் பொறியியல் தொழிலுநுட்பப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்
கிளிநொச்சி கணிதப் பிரிவு மாவட்ட முதல் நிலை புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி (பரந்தன்) பெற்றுள்ளார். அத்துடன் விஞ்ஞானப் பிரிவில் முதல் நிலையை பளை மத்திய கல்லூரி மாணவி க.அபிசிகா( முரசு மோட்டை) பெற்றுள்ளார்.
இதேவேளை கலைப்பிரிவில் சுதானந்தன் திகழினி மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார். இவர் கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி ஆவார்.
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு – 67 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு அவை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகளின் அடிப்படையில் 67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் உயிரியல் விஞ்ஞானத்துறையில் கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அதேபோல் வர்த்தக துறையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி மாணவன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அத்தோடு கலைத்துறையில் பாணந்துறை லைஸியம் சர்வதேச கல்லுாரியைச் சேர்ந்த மாணவனும், பொறியியல் தொழில்நுட்ப துறையில் கொழும்பு ஆனந்தா கல்லுாரியைச் சேர்ந்த மாணவனும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் துறையில் கம்புறுப்பிட்டிய நாரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி முதலிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த அதேவேளை, 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.