கால்நடை தீவனம் கொள்முதல் செய்ததில் சாய்பாஷா கருவூலத்தில் 33.67 கோடி ரூபா முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
2ஆம் இணைப்பு:- பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சிறையிடப்பட்டார்:-
Dec 23, 2017 @ 11:45
கால்நடை தீவன வழக்கில் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மாட்டு தீவனம் வாங்குவதற்கு தும்கா பகுதியில் உள்ள அரசுகருவூலத்தில் இருந்து முறைகேடாக பணம் எடுக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில் இன்றையதினம் லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றில் இன்று முன்னிலையானார். அவருடன் அவரது மகனும் பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவும் சென்றிருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் உள்பட 15 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்த நீதிபதி பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜகநாத் மிஷ்ரா உள்பட 7 பேரை இவ்வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார். தண்டனை விபரம் வரும் ஜனவரி மாதம் 3ம்திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட லாலு, பொய் பிரசாரத்தால் சில வேளைகளில் உண்மைகூட பொய்யாக தோன்றும் எனவும் உண்மை காலணியை மாட்டும் நேரத்துக்குள் பொய்யானது உலகின் பாதி தூரத்தை சுற்றி வந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தர்ம யுத்தத்தில் ஒட்டுமொத்த பீகார் மக்களும் தன்னுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், நீங்கள் எனக்கு தொல்லை தரலாம், ஆனால், என்னை அழித்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் மேலிட தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட அனைவரையும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இருந்து ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர். வரும் ஜனவரி மூன்றாம் திகதிதண்டனை விபரத்தை சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவிக்கும்வரை அவர் இங்கு அடைத்து வைக்கப்படுவார் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கால்நடைத் தீவன ஊழல் லாலு பிரசாத்தின் எதிர்காலம் பற்றிய தீர்ப்பு வருகிறது….
04:06am
இந்தியாவின் பீஹார் மாநலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத்துக்கு எதிராக தொடரப்பட்ட கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2வது வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
பிஹார் முதலமைச்சராக லாலு பிரசாத் பதவிவகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐ லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால் 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டநிலையலி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஒரே புகாரின் கீழ் வௌ;வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து லாலு பிரசாத் தரப்பில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதனையடுத்து ஒரே குற்றத்திற்காக இருமுறை ஒருவர் மீது குற்றம்சாட்ட முடியாது என்று கூறி லாலு மீதான விசாரணையை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்திருந்தது. இதை ஏற்று மீண்டும் விசாரணையை தொடங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் லாலு உள்ளிட்டோர் மீது தனித்த விசாரணை வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதைதொடர்ந்து ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கு இடம்பெற்று வந்தநிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
எனினும் அரசியல் காழ்புணர்ச்சியுடன் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது எனவும் 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை போல, தானும் விடுதலை செய்யப்படுவேன் என லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.