பிரித்தானியாவின் வடபகுதியின் லிவர்பூல் நகரில் பல மாடிகளைக் கொண்டு அமைந்துள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் திடீரென தீ பரவியதில், சுமார் ஆயிரத்து 600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.இந்த நகரில் அமைந்துள்ள கிங்ஸ் டொக் வாகனத் தரிப்பிடத்திலேயே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.12.17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் ஒரே புகைமூட்டமாகக் காணப்பட்டதால், அக்குடியிருப்புத் தொகுதியில் வசித்துவந்த குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள லிவர்பூல் எக்கோ அரினா பூங்காவில் நடைபெறவிருந்த சர்வதேச குதிரை ஓட்ட நிகழ்ச்சி, (The Liverpool International Horse Show) தீ விபத்தையடுத்து ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எனினும், குதிரைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 21 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவொரு பாரிய தீ விபத்தென தீயணைப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து வாகனங்களும் எரிந்து சாம்பலாகியிருக்கும் என தாம் நம்புவதாகவும் காப்புறுதி நிறுவனங்களை வாகன உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளும்படியும் காவற்துறையில் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்த தீவிபத்தில் எவரும் கடுமையான காயங்களுக்கு உட்படவில்லை எனவும், எவரும் பலியாகவில்லை என்பதனையும் உறுதிப்படுத்தி உள்ள தீயணைப்பு வீரர்கள், 12 தீயணைப்பு இயந்திரங்களும், வான் வழி தீயணைப்பு வானூர்திகளும் கீயை கட்டுப்பாட்டுள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிறு மாலைப் பொழுதில் இடம்பெற இருந்த குதிரை ஓட்ட நிகழ்வில் 4 ஆயிரம் பேர்வரை கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், அந்த நிகழ்ச்சியை காண வந்தவர்களின் வாகனங்களே பெரும்பாலும் விபத்தில் சிக்கியதாக கருதுவதாகவும் தெரிவித்தனர். தீவிபத்திற்கான காரணம்இதுவரை அறியப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.