பெங்களூர் பிரஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்தும், வலைதளங்களில் பிரகாஷ் ராஜை விமர்சித்தும் கருத்துகள் வெளியாகின.
இந்நிலையில், தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முதலில் நான் ஓர் இந்தியன். தகுதி வாய்ந்த நபராக இருந்தால், நாட்டின் எந்த ஒரு மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே எனது நிலைப்பாடு. கர்நாடகா, தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்பட எந்த மாநிலமாக இருந்தாலும், பிரித்தாளும் சூழ்ச்சியுடன் செயல்படும், வகுப்புவாத அரசியல்வாதிகளை எதிர் வரும் தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற விடமாட்டோம் என்று தான் கூறினேன். ஆனால் எனது பேச்சை பேச்சை திரித்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. எனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் உங்களின் பயமும், விரக்தி மனநிலையும் வெளிப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.