குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காது விடின் ஊழியர்கள் ஆத்திரத்தின் உச்ச கட்டத்திற்கு சென்று முதலமைச்சரின் உருவ பொம்மையை கூட எரிக்கும் நிலைமை ஏற்படலாம் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ. அருட்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
யாழில். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
நேற்றைய தினம் முதல் நாம் தொடர்ந்து சேவைகளை புறக்கணித்து போராட்டம் நடாத்தி வருகின்றோம். எமது கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காவிடின் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று முதலமைச்சரின் கொடும்பாவியை எரிக்கும் நிலைக்கும் செல்ல நிலை உண்டு.
அவ்வாறு நடந்தால் அதற்கு வடபிராந்திய போக்குவரத்து சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் பொறுப்பு கூறமாட்டாது என தெரிவித்தார்.
அதேவேளை குறித்த போராட்டத்தின் பின் புலத்தில் தமிழ் அரசியல் கட்சி ஒன்று உள்ளதாகவும் , அக் கட்சியின் ஆதரவாளர்களால் முதலமைச்சரின் கொடும்பாவி எரிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து உள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.