புனே மாவட்டம் பீமா கோரேகான் கிராமத்தில் போர் நினைவு அஞ்சலி செலுத்த சென்றவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து, பல்வேறு பகுதிகளிலும், முழு அடைப்புப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. பீமா கோரேகாவில் கடந்த திங்கட்கிழமை போர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த சென்றனர்.
அப்போது அவர்கள் மீது எதிர் தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் nமுற்கொண்டதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நேற்றையதினம் பல இடங்களில் வீதி மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மும்பை உட்பட பல நகரங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவுரங்காபாத் உள்ளிட்ட நகரங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒரு சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அரசை கண்டித்து நாளையதினம் முழு அடைப்பு போராட்டம் – டொக்டர் அம்பேத்கரின் பேரன் அழைப்பு
Jan 2, 2018 @ 15:44
புனே மாவட்டம் பீமா கோரேகான் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய மஹாராஷ்டிரா மாநில அரசை கண்டித்து டொக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் நாளையதினம் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று புனேவின் பீமா கோரேகான் கிராமத்தில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்தாத மாநில அரசைக் கண்டித்தே இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முழுஅடைப்பு போராட்டத்திற்கு 250 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாவும் இந்த வன்முறை சம்பவத்திற்கு இந்து ஏக்தா அகாதி அமைப்பே முழு காரணம் எனவும் பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
புனேவில் கிழக்கிந்திய கம்பெனியை வீழ்த்திய பேஷ்வா படையின் வெற்றியை கொண்டாடும் விதமாக 200வது பீமா கோரேகான் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட போது ஏற்பட்ட வன்முறையில் தலித் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
கோரேகான் போர் நினைவிடத்தை நோக்கி மக்கள் பேரணியாக சென்ற போது இந்து ஏக்தா அகாதி அமைப்பினர் அவர்கள் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். இது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.