வெள்ளைவான் கடத்தல் ரவிராஜ் கொலையில் தொடர்பு!!!
இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் , 11 தமிழ் இளைஞர்களை வெள்ளை வானில் கடத்தி காணாமல்ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தப் பகிரங்க பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று (02.01.18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் பிரதான சந்தேகநபரான கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டோ டீ.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட 6 பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு எதிராக பகிரங்க பிடியாணை உத்தரவை நீதவான் லங்கா ஜயரத்ன பிறப்பித்தார். லெப்டிணன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கில் முன்பு கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். எனினும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பிற்கெதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டிற்கு அமைவாக நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.
இருந்தபோதும் அவர் மன்றில் ஆஜராக தவறியதைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாகவும் அவரை கைதுசெய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.