குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசியல் கட்சி சார்பில் நல்லூர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் , இளைஞர் ஒருவருக்கு எதிராக தாம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
அது தொடர்பில் மிரட்டலுக்கு உள்ளான இளைஞர் தெரிவிக்கையில் ,
குறித்த வேட்பாளரும் நானும் பாடசாலை நண்பர்கள். குறித்த வேட்பாளர் பாடசாலை காலத்தில் மாணவ அமைப்புக்களில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்த போது பல ஊழல்களை செய்திருந்தார். அது தொடர்பில் நான் எனது முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதனை தொடர்ந்து குறித்த வேட்பாளர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் கோப்பாய் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினரை எனது வீட்டுக்கு அழைத்து சென்று மிரட்டியுள்ளார்.
நான் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருவதனால் வீட்டாரிடம் என்னை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு கோரி கோப்பாய் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து சென்று உள்ளனர். அவர்கள் வீட்டாரிடம் கொடுத்த தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி கதைத்த போது காவல்துறையினர் குறித்த வேட்பாளர் தனக்கு எதிராக முகநூளில் பதிவிட்டு உள்ளதாகவும் , ஆட்களை வைத்து தன்னை மிரட்டியதாகவும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
அவ்வேளை காவல்துறையினரிடம் இருந்து தொலைபேசியை பறித்து பேசிய குறித்த வேட்பாளர் பயங்கரவாத தடை சட்டம் தற்போதும் அமுலில் தான் உள்ளது. அதனை பயன்படுத்தி என்னை தூக்குவேன் என மிரட்டினார். அத்துடன் நான் வெளிநாட்டில் வசித்து வருவதனால் தினமும் கோப்பாய் காவல்துறையினருடன் வீட்டுக்கு சென்று வீட்டாரை அச்சுறுத்தி வருகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.