குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடியினால் ஏற்பட்ட நட்டத்தை மீள அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல்களில் 11145 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனம் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் மகேந்திரன் அவர்களினதும் வங்கி உத்தியோகத்தினர்களினதும் வெளியிலிருந்து செயற்பட்ட நபர்களினதும் நிறுவனங்களினதும் பங்கேற்புடனும் பேர்பச்சுவல் ரெஸறிஸ் நிறுவனம் சட்டத்திற்கு முரணான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளது என்பதை இந்த அறிக்கை கூறுகின்றது .
அத்தோடு அர்ஜுன் மகேந்திரன் அவர்கள் முறைகேடான முறையிலும் தவறான முறையிலும் தீர்மானங்களை மேற்கொண்டு பிணைமுறை ஏலம் தொடர்பான செயற்பாடுகளில் சம்மந்தப்பட்டிருப்பதுடன் உள்ளக தகவல்களை வெளித்தரப்பினருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு இலாபமீட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது.
அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிப்பது தொடர்பான கௌரவ பிரதமர் அவர்களின் அதிகாரங்கள் முறையானது என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் கோப் விசாரணைக்குழுவின் முன்னிலையிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் பிரதமர் அவர்களால் அர்ஜுன் மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
அலோசியஸ் குடும்பத்தினருக்கு சொந்தமான, அவர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த வோல்ட் அன் றோ நிறுவனத்தினால் பென்ட் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பென்ட் ஹவுஸ் மாடி வீட்டுக்கு மாதாந்த வாடகை செலுத்தியிருப்பதையிட்டு பொறுப்பேற்க வேண்டியவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களே என்பதும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும், ஆணைக்குழுவின் முன்னால் பொய் சாட்சியம் அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும் இவ்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது
ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) நிதியே அக்காலத்தில் அதிகளவில் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய குற்றலியல் மற்றும் சிவில் வழக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினாலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினாலும் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு ஏற்கனவே தாம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன், பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க ஆகியோர் குற்றம் இழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.