குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நாளையும் தொடரும் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருள்பிரகாசம் தெரிவித்தார்.
‘வடக்கு மாகாண முதலமைச்சருடன் இன்று மாலை இடம்பெற்ற பேச்சுக்களில் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். போராட்டத்தை விரிவுபடுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம் எனவும் தொழிற்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்
இதேவேளை, வட பிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் 3 நாள்களாக முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் இன்று பிற்பகலுடன் நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இ.போ.சவின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து வந்து முதலமைச்சரிடன் நடத்திய பேச்சுககளின் பின்னரே அவ்வாறு அறிவிக்கப்பட்டது. எனினும் சந்திப்பை மேற்கொண்ட தொழிற்சங்கத்தினர் குழப்பத்தினை ஏற்படுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்த தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.