குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் குற்றவாளிகளாக யாழ்.நீதிவான் நீதிமன்று கண்டுள்ளது. யாழ்.கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடொன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்று சில தினங்களுக்கு பின்னர் , கொள்ளையிட்ட நகைகளை குறித்த வங்கி உத்தியோகஸ்தர் பணிபுரியும் வங்கியில் அடகு வைப்பதற்கு முயற்சித்துள்ளார்கள். அதன் போது குறித்த நகைகளை அடையாளம் கண்டு கொண்ட வங்கி உத்தியோகஸ்தர் அது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட யாழ்ப்பாண காவல்துறையினர் நகைகளை அடகு வைக்க வந்தவர்களை கைது செய்து கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் காவல்துறையினர் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர். அவர்கள் நால்வர் மீதும் நகைகளை கொள்ளையடித்தமை , கொள்ளையடித்த நகைகளை உடமையில் வைத்திருந்தமை , அவற்றை அடகு வைக்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றசாட்டுக்களை முன் வைத்து குற்றப்பத்திரிக்கையை யாழ்.நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் காவல்துறையினர்; தாக்கல் செய்தனர்.
அதனை தொடர்ந்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் தடுத்து வைத்து நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் பின்னர் நால்வரும் ஆள்பிணையில் செல்ல நீதிமன்று அனுமதி அளித்தது.
அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி.சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது குறித்த நால்வர் மீதான கொள்ளை குற்ற சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்க முடியவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்து இருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றசாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
அதனால் குறித்த நால்வரையும் நீதிமன்று குற்றவாளியாக காண்கின்றது. குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை தீர்ப்பு எதிர்வரும் முதலாம் திகதி வழங்கப்படும் என நீதிவான் அறிவித்தார்.
யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான சுதர்சிங் விஜயகாந்த் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இருந்தார். அக்கால பகுதியிலையே கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த குற்ற சாட்டில் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டத்தை அடுத்து ஈழமக்கள் ஜனநாயக கட்சி விஜயகாந்தை உறுப்பினரில் இருந்து நீக்கியதன் பின்னர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியை உருவாக்கி அதன் செயலாராக தற்போது உள்ளார்.
குறித்த முற்போக்கு தமிழ் தேசிய கட்சி இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.