சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். ஜனவரி 14ம் திகதி இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் அதிக அளவில் சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர் என்பதால் இந்த கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 வயதிற்கும் கீழ் உள்ள சிறுமிகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை செல்லும் பெண்கள் இனி தகுந்த வயது சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும் என தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டையைக் கூட வயதிற்கான சான்றாக காட்டலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருவதாக சில சந்தேகங்கள் எழுந்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தகுந்த வயது சான்றிதழை காட்டினால் காவலர்கள் மற்றும் கோவில் பராமரிப்பாளர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம் என்றும் தேவசம்போர்டு தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை கோவிலுக்கு செல்ல தடை செய்யப்பட்ட வயதைச் சேர்ந்த 260 பெண்களை கோவிலுக்குள் நுழைய முயன்று, தடுக்கப்பட்டதாக தேவசம் போர்டு குறிப்பிட்டுள்ளது.