அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு ஜப்பான் முழுமையாக உதவ தயாராக உள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி n மைத்ரிபால சிறிசேனவினைச் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார்.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம்செய்திருப்பது 15 வருடங்களுக்கு பின்னராகும் என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்குமிடையில் சிறந்த வர்த்தக உறவுகள் பேணப்பட்டுவருவதாக குறிப்பிட்ட ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து மேலும் கண்டறிய விசேட தூதுக்குழுவொன்றை இம்மாதம் கடைசியில் இலங்கைக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிசி சுகானுமா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.