மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில், இராணுவத்தினர் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. மன்னாரின் இரண்டு பிரஜைகள் அமைப்புகள், வட மாகாண கல்வி மற்றும் கலாச்சார அமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்த இடத்தில் சிற்றூண்டிச்சாலை ஒன்றை நடத்திவரும் இராணுவத்தினர் குறித்த இடத்தில் உள்ள மரத்திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மன்னார் பிரஜைகள் சங்கம் கூறியுள்ளது.
இந்த இடத்தில் இவ்வாறான செயலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாதுஎனவும், அது மடு தேவாலயத்திற்கு செய்யும் மிகப் பெரிய அவமரியாதையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. தற்போது இவ்விடத்தை வணக்க வழிபாடுகள் நடத்தும் இடமாக இராணுவப் படையினர் மாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பிரஜைகள் சங்கம், பிரபல கிறிஸ்தவ தேவாலயம் உள்ள இடத்தில் இவ்வாறான செயலை அனுமதிக்க முடியாது என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கில் பல இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து வணக்க வழிபாடுகள் ஈடுபடுகின்ற இராணுவத்தினர், அவ்விடத்தை விட்டு செல்லும் போது, சிலைகளை அகற்றாமல் செல்வதன் மூலம் ஏற்படுகின்ற பிரச்சினை, தேசிய ரீதியான பிரச்சினையாக உருவெடுப்பதால் இந்த இடத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முன்னரே இச்செயற்பாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டும் வட மாகாண சபையிடம் வேண்டியுள்ளது.