உலகின் முன்னணி உதைப்பந்தாட்ட வீரர் மெஸ்சியின் தற்போதைய மதிப்பு 700 மில்லியன் யூரோவாக உள்ள நிலையில், வேறு கழகத்திற்கு மாற்றலாகி செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த 30 வயதாகும் மெஸ்சி, கடந்த 2003-ம் ஆண்டு தொடக்கம் 16 வயதில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் மெஸ்சி, பார்சிலோனா கழகத்திற்காக பல்வேறு வெற்றிக் கிண்ணங்களை வாங்கி கொடுத்துள்ளதோடு, தனிப்பட்ட வகையிலும், பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நெய்மர் 200 மில்லியன் டொலர் அளவிலான பெரும் தொகைக்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறினார். 30 வயதாகும் மெஸ்சி பார்சிலோனா அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பார்சிலோனா அணி மெஸ்சி உடனான ஒப்பந்தத்தை நீடித்தது.
அப்போது மெஸ்சியின் buyout clause 700 மில்லியன் யூரோ என்று தெரிவித்திருத்தது. இது அமெரிக்க டொலருக்கு 843 மில்லியனும், இந்திய மதிப்பிற்கு 5343 கோடி ரூபாயும் ஆகும். வேறு எந்த அணியும் மெஸ்சியை நாடிவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவு பெரிய தொகையை நிர்ணயித்தது.
இந்நிலையில்தான் ஸ்பெயின் தலைமையில் இயங்கி வந்த கட்டலோனியா பிராந்தியத்தில் தனி நாடு கோரிக்கை எழுந்தது. இதற்கான வாக்கெடுப்பில் கட்டலோனியா பிரிவதற்காக ஆதரவாக அதிக அளவில் வாக்களிக்கப்பட்டது. இதனால் ஸ்பெயினி்ல் இருந்து கட்டலோனியா எப்போது வேண்டுமானாலும் பிரிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கட்டலோனியா பிராந்தியத்திலேயே பார்சிலோனா கழகம் உள்ளதனால் பார்சிலோனா லா லிகா தொடரில் விளையாட சாத்தியமில்லை. பிரித்தானியா , ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெறும் லீக் உடன் இணையலாம்.
மெஸ்சி தனது ஒப்பந்தத்தில் லா லிகாவில் விளையாடினால் மட்டும்தான் இந்த ஒப்பந்தம் செல்லும். பார்சிலோனா வேறு நாட்டு லீக்கில் இணைந்தால் ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியின்படி பார்த்தால் ஒருவேளை கடலோனியா பிரிந்து பார்சிலோனா வேறு நாட்டு லீக்கில் விளையாடினால் மெஸ்சி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் வேறு அணிக்குச் செல்லலாம். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது பார்சிலோனா கழகத்துக்கு பெரிய இழப்பாகும். மெஸ்சியை வாங்கும் கிளப்பிற்கு ஜாக்பொட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.