ரஜினிகாந்த் குறிப்பிட்ட மதத்திற்காக மட்டுமே பேசுகிறார், அவர் மதவாத அரசியலின் முகமாக இருக்கிறார் எனவும், ரஜினிகாந்தின் அறிவிப்புகளும், பேச்சுக்களும் அனைவரையும் கவரவில்லை எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை நேற்று கோபாலபுரம் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் திருமாவளவன் ஊடகவியலாளர்களிடம் பேசினார்.
“கருணாநிதியுடன் சந்திப்பு கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். எங்களை நன்றாக அடையாளம் கண்டார், என் பெயரை உச்சரித்தார். அந்த அளவுக்கு உடல் நலம் தேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலம் மைய நோக்கு விசையாக விளங்கியவர்.
கருணாநிதியை சுற்றியே தமிழக அரசியல் 1969 லிருந்து இயங்கி வந்தது. இன்று முதுமை காரணமாக உடல் நலிவுற்ற நிலையிலும் அவர் அரசியலை உற்று கவனிக்கிறார், அரசியல் தலைவர்களை அடையாளம் காண்கிறார், வாழ்த்து தெரிவிக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர் இன்னும் நலமோடு நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். அவருத்து தமிழர் திருநாள் வாழ்த்துக்களாக அதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் திருமாவளவன் கூறினார்.
இதன் பின் கருத்து வெளியிட்ட அவர், ரஜினிகாந்த் அரசியல் பற்றியும் விளக்கம் அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புகள், நிலைப்பாடுகள் அனைவரையும் கவரவில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக மட்டுமே பேசுகிறார். ரஜினிகாந்த் மதவாத அரசியலின் முகமாகவும் இருக்கிறார் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
ரஜினி ஆட்சிக்கு வந்தால் அது நிச்சயம் நேரடி ஆர்.எஸ்.எஸ் ஆட்சியாகவே இருக்கும்…
தனிக்கட்சி ஆரம்பித்து, ஒருவேளை வெற்றிபெற்று, ரஜினி ஆட்சிக்கு வந்தால் அது நிச்சயம் நேரடி ஆர்.எஸ்.எஸ் ஆட்சியாகவே இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விமர்சித்து உள்ளார்.
சென்னையில் உள்ள பெரியார் திடல் எம்.ஆர்.ராதா அரங்கில், தி.க தலைவர் கி.வீரமணி எழுதிய அம்பேத்கர் தொடர்பான புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,
தமிழகத்தின் அரசியல் களம் வேதனை தருவதாக மாறி வருகிறது. அதற்கு ஏற்றாற் போல தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் இந்த வேதனையை அதிகப்படுத்துவது போல இருக்கிறது என குறிப்பிட்டார். மேலும், ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளியான நாளில், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் என்று ரஜினி குறிப்பிட்டதை அடுத்தே வாழ்த்து தெரிவித்தாகவும், ஆனால் பிறகு அது ஆன்மிக அரசியல் என்று சொன்னதில் இருந்தே அவரது அரசியல் கொள்கை என்னவென்று தனக்கு விளங்கியதாவும் தெரிவித்தார்.
அரசியலுக்கு வருவதற்கு முன் மந்த்ராலயம் போனது, அறிவிப்புக்கு பின் ராமகிருஷ்ண மடம் சென்றது இவை எல்லாம் வைத்து பார்க்கும்போதும், சோ இருந்து இருந்தால் தனக்கு 1000 யானை பலம் கிடைத்து இருக்கும் என்று சொன்னதை வைத்தும் ரஜினி கொள்கை என்று எதை சொல்கிறார் என்று தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்மூலம், ரஜினி கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நின்று, வெற்றி பெற்று ஒருவேளை முதல்வர் ஆகி விட்டால் அப்போது அமையும் ஆட்சி இந்து மதத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நேரடி ஆட்சியாக இருக்கும் என கடுமையாக விமர்சித்து உள்ளார்.