முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து திருவள்ளூர் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி
பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரிஅத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் இன்று 05-01-2018 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் திருவள்ளூரில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.
மத்திய அரசைக் கண்டித்து கணடன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு இது பல்வேறு தேசங்களின் ஒன்றியம். அதனையுணர்ந்து அந்தந்த மக்களின் அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால் இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகிவிடும்.
இசுலாத்தில் நபிகள் வகுத்துத் தந்த வழியில் குரான் காட்டிய நெறியில் அவர்களது வாழ்வியல் முறை அமைத்துக் கொள்ளப்படுகிறது. அம்முறை இந்தியா உருவாவதற்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் நாம் தலையிட்டு மாற்ற முடியாது. ஒரு ஆணும், பெண்ணும் மணவாழ்க்கையில் இணைவது போல பிரிவதற்கும் அவர்களுக்கு உரிமையிருக்கிறது. ஒரே தடவையில் மூன்று முறை தலாக் சொல்வதை இங்கு யாரும் ஏற்கவில்லை; அம்முறையும் நடைமுறையில் இல்லை.
ஒருமுறை தலாக் சொன்னால் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் குறிப்பிட்ட இணைந்து வாழ வேண்டும் என்கிற நடைமுறை இருக்கிறது. இதற்கிடையே இருவருக்கும் மனவொற்றுமை ஏற்பட்டு வாழ விரும்பினால் அவர்களை வாழ அனுமதிக்கிறார்கள். ஒருவேளை, அப்படியும் மனக்கசப்பு நீங்காவிட்டால் மேலும் குறிப்பிட்ட நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கு மணமுறிவு கோரி சென்றால்கூட அங்கும் ஆறுமாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனைத்தான் இங்கு ஷரிஅத் சட்டமும் சொல்கிறது. இதிலென்ன பிழையிருக்கிறது?
முத்தலாக் சொன்னால் கணவனுக்கு மூன்று ஆண்டு சிறை என்றால் இருவருக்கும் மனவொற்றுமை ஏற்பட என்ன வாய்ப்பிருக்கிறது; எப்படி அவர்களால் இணைந்து வாழ முடியும் என்று கேள்விஎழுப்பினார்.