பிரித்தானியாவின், பாராளுமன்ற வை-பை வலைப்பின்னலில் இருந்து ஒரு நாளைக்கு 160 முறை ஆபாச இணையதளங்களிற்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
பிரிரித்தானிய பாராளுமன்றத்தில் உள்ள கணனிகள் தனியான வலைப்பின்னலில் இயங்கி வருகின்றன. இந்த வலைப்பின்னல்களில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இருந்தும், அந்த தளங்களுக்கு செல்ல ஒரு நாளைக்கு குறைந்தது 160 முறை முயற்சி நடந்துள்ளதாக பிரித்தானியாவின், ப்ரெஸ் கூட்டமைப்பு அறிக்கையளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இது வரை 24,473 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள இணைய தொடர்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அலுவலக ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆபாச தளங்களுக்குள் செல்லும் முயற்சி வேண்டுமென்றே நடப்பது போல தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் நெருக்கமான அரசியல் நண்பர் தாமியன் க்ரீன் பாலியல் குற்றச்சாட்டால் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். வெஸ்ட்மின்ஸ்டெரில் உள்ள அவரது அலுவலக கணனியில் ஆபாச தளங்களுக்கு சென்றதாக ஆதாரம் இருந்ததாக கூறப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.