குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனது மகளான சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் 2013ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி 14 வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையான இரத்தனசிங்கம் சிவகரனைக் கைது செய்தனர். மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 3 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகநபர் மேல் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாகியதனால் அவரைப் பிணையில் எடுத்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கிளிநொச்சிப் காவல்துறையினரால் சந்தேகநபர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
‘எதிரி தான் செய்த குற்றத்தை தற்போது ஏற்றுக்கொள்கிறார். அது குறித்து அவர் வருந்துகிறார்’ என்று எதிரியின் சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார். ‘எதிரி குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் அவருக்கு உச்சபட்ச தண்டனையை வழங்கி தீர்ப்பளிக்கவேண்டும்’ என்று அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் மன்றிடம் விண்ணப்பம் செய்தார்.
‘எதிரி குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். 3 குற்றங்களுக்குமாக எதிரிக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிரி 45 ஆயிரம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். 3 குற்றங்களுக்குமாக 6 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்’ என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 45 ஆயிரம் ரூபா இழப்பீட்டை எதிரியான தந்தை நீதிமன்றிலேயே வழங்கினார்.