ஒஸ்கர் விருதுக்கு அடுத்ததாக, உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவெர்லி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது.
இதில் சிறந்த திரைப்படமாக ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸவுரி’ (Three Billboards Outside Ebbing, Missouri) தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட படத்துக்கான பிரிவில் ‘லேடி பேர்ட்’ (Lady Bird) தேர்வானது.
சிறந்த நடிகராக ‘டார்க்கஸ்ட் ஹவ்ர்’ (Darkest Hour) படத்தில் நடித்த கேரி ஓல்மேன் மற்றும் சிறந்த நடிகையாக ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸவுரி’ படத்தில் நடித்த பிரான்செஸ் மெக்டோர்மன்ட், சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட படப்பிரிவில் சிறந்த நடிகராக ஜேம்ஸ் பிராங்கோ, சிறந்த நடிகையாக சாவோய்ர்ஸே ரோனன், சிறந்த இயக்குநராக குயிலெர்மோடெல் டோரோ ஆகியோர் தேர்வாகினர்.
இந்த விழாவில் ஹொலிவுட் வெளிநாட்டு பத்திரிகைகள் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்படும் ‘செசில் பி. டெ மில்லே விருது’ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் கொடையாளருமான ஓப்ரா வின்பிரே-வுக்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில், சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட தொலைக்காட்சி தொடர் பிரிவில் ‘தி மாஸ்டர் ஆப் நன்’ (The Master Of None) தொடரில் நடித்த அஸிஸ் அன்சாரி என்பவருக்கு சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அஸிஸ் அன்சாரி கடந்த 2016-ம் ஆண்டிலும் இதே நாடகத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அப்போது கைநழுவிப்போன வாய்ப்பு அவருக்கு இப்போது கைகூடியுள்ளது. ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை பெறுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களோடு ஒற்றுமையாக நிற்கும் டைம்ஸ் அப் இயக்கத்திற்கு ஆதரவாக நடிகைகள் கருப்பு நிற கவுன் அணிந்து வந்திருந்தனர்.
பல ஆண்களும் கருப்புச் சட்டையுடன் டைம்ஸ்-அப் பேட்ஜ் அணிந்திருந்தனர்.
லவ்விங் பேப்லோ திரைப்படத்தின் நடிகை பெனிலோப் க்ரஸ், பாடகர் மரியா கரே, பிரிட்டிஷ் நடிகை க்லைர் ஃபாய் ஆகியோர் கருப்பு உடை அணிந்து வந்தவர்களில் சிலராவர்.
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கருப்பு நிறமுள்ள வெவ்வேறு விதமான ஆடைகளையும் சிலர் அணிந்து வந்திருந்தனர். சூசைட் ஸ்குவாட் படத்தின் மார்கோட் ராபி, நடிகை மாண்டி மூர் மற்றும் பாடகி கெல்லி கிளார்க்சன் ஆகியோர் அதில் சிலர்.
தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் இவான் மெக்கிரீகர் ஆகியோர் உடைகளில் டைம்ஸ் அப் என்ற வார்த்தை சட்டைப்பையில் காணப்பட்டது. அதே வேளையில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் கிட் ஹேரிங்டன் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டார்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் நடிகை மில்லி பாபி ப்ரவுன், நிக்கோலே கிட்மேன் மற்றும் ஜெஸ்ஸிகா பீயல் சிவப்பு கம்பளத்தில் வெவ்வேறு விதமான கருப்பு உடைகளை அணிந்து வந்திருந்தனர்.
கருப்பு நிற உடைந்து அணிந்து வந்திருந்த ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜெஸ்ஸிகா சஸ்டெயின் ஆகியோரைப் போல மாடல் கென்டல் ஜென்னரும் வந்திருந்தார்.
அமெரிக்கா ஃபெராரா மற்றும் நடாலி போர்ட்மேன் சிவப்புக் கம்பளத்தில் கருப்பு நிற உடைந்த அணிந்து நடந்து வந்தனர். லாலா லேண்ட் நட்சத்திரம் எம்மா ஸ்டோன் மற்றும் முன்னாள் டென்னிஸ் சாம்பியன் பில்லி ஜீன் கிங்.
நடிகை ரீஸ் விதர்ஸ்பூன், எவா லொங்கோரியா, சல்மா ஹய்க் மற்றும் ஆஷ்லே ஜட் போஸ் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வண்ணம் நால்வரும் இணைந்து வந்தனர்.
கருப்பு வண்ண உடை அணியாதவர்கள் யார்?
ஹாலிவுட் அயலக பத்திரிகையாளர் அமைப்பு தலைவர் மெஹர் டட்னா சிவப்பு நிற உடை அணிந்திருந்தார். ”தனது தாயுடன் இணைந்து தேர்வு செய்த உடையை அவர் அணிந்திருந்தார்” என தி விராப் தெரிவித்துள்ளது.
”இந்திய கலாச்சாரத்தின் பகுதியாக, கொண்டாட்ட நிகழ்வுகளில் விழாக்காலங்களில் அணியக்கூடிய வண்ண உடைகளை அணிவது வழக்கம்” என அவர் தெரிவித்திருந்தார் .
டைம்ஸ் அப் இயக்கத்துக்கான ஆதரவை தெரிவிப்பதற்காக அவர் தனது பேட்ஜ் அணிந்திருந்தார்.
ஜெர்மன் மாடல் பர்பரா மீயர் பெய்ஜ் ஃப்ளோரல் என அழைக்கப்படும் ஒரு வித பழுப்பு நிற கவுன் அணிந்திருந்தார். நடிகை பியங்கா ப்ளாங்கோ சிகப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார்.
பலரும் கோல்டன் குளோப் விருது வழங்கப்படும் களத்தை கருப்பு மயமாக்கியிருந்த நிலையில் மீயர் தனது உடை தேர்வு குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். ”சற்று கவர்ச்சியாக இருக்கக்கூடிய உடைகளை பெண்கள் அணிய இயல வேண்டும் என்றும் ”ஆண்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாது” என்பது அவர்களின் தவறல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை பிளாங்கோ சிவப்பு வண்ணம் அணிந்து வந்த தனது முடிவு குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
மூலம் – பிபிசி