பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ் தொடர்பான, கொலை வழக்கு படத்தில் நித்யா மேனன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு பெங்களூருவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவம் குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ‘பிராணா’ என்ற படம் 4 மொழிகளில் உருவாகிறது.
எழுத்தாளர் பாத்திரத்தில் நித்யாமேனன் நடிக்கிறார். இந்தப்படத்தை விகே.பிரகாஷ் இயக்குகிறார். இது கவுரி லங்கேஷ் கொலை வழக்கை மையமாக கொண்ட கதையா, கௌரி லங்கேஷ் பாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த நித்யாமேனன, “பிராணா படம் 4 மொழிகளில் உருவாகிறது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக 4 முறை நடிக்க வேண்டி இருப்பதால் மிகுந்த சிரமத்தை தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.
இதுபோல் வேறு யாரும் நடித்திருக்கிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை. எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கவுரி லங்கேஷ் பாணியிலான கதை என்றாலும் கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு 4 மாதத்துக்கு முன்பே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன.
அந்த சம்பவத்துக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை. சகிப்புதன்மை இல்லாதது இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கிறது என்பது தெரிகிறது. மக்கள் தங்கள் எண்ணங்களை எந்த பயமும் இல்லாமல் வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. அதற்காக கண்டபடி எழுதலாம் என்று கூறவில்லை. உண்மை என்ன என்பதை ஒருவர் வெளிப்படுத்த முயலும்போது தாங்கள் மிரட்டப்படுவோம் என்று அவர்கள் பயப்படக் கூடாது. அதுபோன்ற சூழல் சமூகத்தில் ஆரோக்கியமற்ற விளைவுகளை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.