மடகாஸ்கர் நாட்டை தாக்கிய அவா புயலால் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ஆப்பிரிக்க கண்டத்துக்கு அருகே இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் என்ற தீவு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடும் வறட்சியும் அதைத் தொடர்ந்து உணவு தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு அவா என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. நகர்ந்து நகர்ந்து ஒவ்வொரு பகுதியாக அந்நாட்டின் கிழக்குப் பகுதி முழுவதையும் சூறையாடியது அவா புயல்.
இப்புயலினால் மடகாஸ்கரின் கிழக்கு பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 140 முதல் 190 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு பிடுங்கியெறியப்பட்டன. மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. பலத்த காற்றோடு கனமழையும் கொட்டியது. இதனால் தலைநகர் அன்டனானரீவோ, துறைமுக நகரான டோமாசினா, டமட்டாவே உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சாலைகள் துண்டிப்பு ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விழுந்துள்ள மரங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன புயல் மழை காரணமாக அண்டனானரீவோ பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலுக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர்.
80,000 பாதிப்பு 22 பேர் மாயமாகியுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் உலகில் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் அடிக்கடி புயல்களும் தாக்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தாக்கிய எனாவோ புயலால் 78 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.