குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்யும் நோக்கில் உடமையில் 836 மில்லிக் கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுமார் 15 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சுன்னாகத்தில் உயிர்க்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோயினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் செல்வநாயகம் சத்தியசாயிபாபா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி தொடக்கம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சந்தேகநபர் சார்பில் அவரது மனைவி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அதன் மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இந்தநிலையில் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க ஆட்சேபணை இல்லை என மன்றிடம் விண்ணப்பம் செய்தார்.
‘சந்தேகநபர் 50 ஆயிரம் ரூபா பணத்தை மல்லாகம் நீதிவான் மன்றில் வைப்பிலிடவேண்டும். 2 இலட்சம் ரூபா பெறுமதியை உறுதிப்படுத்தக்கூடிய இருவர் பிணை முறியில் கையொப்பமிடவேண்டும். சந்தேகநபரின் கடவுச் சீட்டு மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரிடம் கையளிக்கப்படவேண்டும்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை சுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேகநபர் கையொப்பமிடவேண்டும் ஆகிய நிபந்தனைகள் மன்றினால் விதிக்கப்படுகிறது’ என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிணை விண்ணப்பம் மீதான கட்டளையை வழங்கினார்.