குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளா அல்லது ஆறு ஆண்டுகளா என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு சட்ட விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமது பதவிக் காலம் 2020ம் ஆண்டிலா அல்லது 2021ம் ஆண்டிலா பூர்த்தியாகின்றது என்பதனை அறிந்துகொள்ள விரும்புவதாக கூறி ஜனாதிபதி கடிதமொன்றை உச்ச நீதிமன்றிற்கு அனுப்பி வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விடயம் குறித்து ஆராயும் நோக்கில் ஐந்து பேர் அடங்கிய நீதிபதி குழுவொன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.
2021ம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக பதவியில் நீடிப்பதற்கு மைத்திரி முயற்சி?
Jan 9, 2018 @ 11:52
எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக பதவியில் நீடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக பதவி வகிப்பது குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை ஜனாதிபதி கோரியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்று முழுதாக இல்லாதொழிக்கப் போவதாக வாக்குறுதி அளித்தே ஜனாதிபதி மைத்திரி ஆட்சி பீடம் ஏறியிருந்தார். எனினும், 19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையிலேயே பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில், 19ம் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாம் தமது பதவிக் காலத்தில் ஓராண்டை தியாகம் செய்துள்ளதாக முன்னதாக ஜனாதிபதி கூறியிருந்தார். எனினும், தற்பொழுது ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட முடியுமா என ஜனாதிபதி உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி செயலகம் எழுத்து மூலம் உச்ச நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.