192
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
வடக்கு மாகாணத்தில் உலக உணவுத் திட்டம் முன்னெடுத்து வந்த பாடசாலை மதிய உணவு இந்த ஆண்டு கைவிடப்பட்டிருந்தமை தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் பதிவொன்றை வெளியிட்டிருந்தது. இதே வேளை பாடசாலை மதிய உணவுத் திட்டத்தினை மத்திய மாகாண அமைச்சுக்கள் பொறுப்பேற்றுள்ளன.
இதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்க மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கள் நிதியினை ஒதுக்கியுள்ளன. பாடசாலை மதிய உணவு திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் பசியுடன் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களுக்கு இன்று மீண்டும் மதிய உணவு வழங்கப்பட்டது.
வன்னியில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் உலக உணவுத் திட்டத்தின் உணவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர். போரில் பெற்றோரை இழந்தவர்கள், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் என லட்சக் கணக்கான மாணவர்கள் குறித்த உணவினை நம்பி பாடசாலைக்கு வருகை தருவதுண்டு.
இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு முதல் தாம் முன்னெடுத்த பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை நிறுத்துவதாக உலக உணவுத் திட்ட நிறுவனம் அறிவித்திருந்தது. வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தொடர்ந்தும் உணவினை வழங்குவது அவசியமானது என்று மாணவர்கள் தரப்பிலிருந்து சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில் மாகாண மத்திய கல்வி அமைச்சுக்கள் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உணவினை வழங்க பாடசாலைகளை நிர்வகிக்க ஆரம்பித்துள்ளனர். இரண்டு மாதங்கள் வரை இத் திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலமையினை கரிசனையில் கொண்டு இந்த மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கள் மற்றும் அரசாங்கங்கள் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும் பலதரப்பட்டவர்களாலும் வலியுறுத்தப்படுகின்றது.
தொடர்புடைய குளோபல் தமிழ் செய்திகளின் பதிவு
லட்சம் சிறுவர்களுக்கு உணவில்லையெனில்!
Spread the love