முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு, அமைச்சர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார். அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து எங்களை துடைத்தெறிவதாக சொல்லும் ரவி கருணாநாயக்கவை பார்த்தால் சிரிப்பு வருகிறது
– மனோ கணேசன்
எங்கள் கட்சியை கொழும்பிலிருந்து துடைத்து எறியப்போவதாக, வடகொழும்பு புளுமெண்டால் வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறியுள்ள ரவி கருணாநாயக்க எம்பியை பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது. இந்த ரவி கருணாநாயக்க, இன்று அமைச்சரவையில் இருந்து துடைத்து எறியப்பட்டு விட்டார். இப்போது இவரது தன் சொந்த கட்சியில் இருந்தே படிப்படியாக துடைத்து எறியப்பட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் அரசாங்கத்திலிருந்து முழுமையாக தூக்கி எறியப்படும் சூழலையும் இவர் எதிர்நோக்குகிறார். இவை அனைத்தும் இவரே தேடிக்கொண்ட வினைகள் என்பது முழுநாடும் அறியும். உப்பை அள்ளி சாப்பிட்ட அவர் இன்று தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்கிறார். இவற்றுக்கு நான் காரணம் இல்லை.
இந்நிலையில் என்னையும், என் கட்சியையும் துடைத்து எறியப்போவதாக சொல்லும் இவரது கருத்து, இந்த புதிய ஆண்டின் முதல் மகா நகைச்சுவையாக இருக்கிறது. இவரைவிட மிகப்பெரிய கொம்பர்களையெல்லாம் எதிர்கொண்ட எனது வரலாற்றை மறந்துவிட்டு, யாருடன் மோதுகிறோம் என்ற தெளிவில்லாமல் எனக்கு இவர் சவால் விடுகிறார். இவரைப்போன்ற அரசியல் கோமாளிகளின் வெற்று கூச்சல்களையும், கட்டளைகளையும் கேட்டு, பயந்து, வீட்டுக்கு உள்ளேயே முடங்கிவிடும் பழைய தலைமுறையை சார்ந்தவன் நானல்ல என்பதையும், நான் தன்மானமுள்ள ஒரு புதிய தலைமுறை தமிழ் இலங்கையன், கட்சித்தலைவர், கூட்டணி தலைவர், அமைச்சரவை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என்பதையும், இவர் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். ஆகவே அரசியலில் என்னுடன் விளையாட வேண்டாம் என நண்பர் ரவி கருணாநாயக்கவுக்கு கூறுகிறேன் என முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய செயற்குழு கூட்டத்தில் விளக்க உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
உண்மையில் இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் கொழும்பு மாநகர சபை தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிடும் ஏனைய சிறுபான்மை கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களையும், ரவி கருணாநாயக்க கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளார். வேட்பு மனுவில் இரவில் கையெழுத்து போட்ட சிலரது பெயர்கள் காலையில் வெட்டி அழிக்கப்பட்டு மாற்று பெயர்கள் புகுத்தப்பட்டுள்ளன. எங்கள் கட்சியும் உடன்பட்டு இவர்களது வேட்பு மனுவில் கையெழுத்திட்டிருந்தால், எங்கள் முக்கியமான வேட்பாளர்களின் பெயர்களும் கடைசி நேரத்தில் இப்படி வெட்டி அழிக்கப்பட்டு இருக்கும். ஏனைய சிறுபான்மை கட்சிகள் இந்த சதியில் சிக்கிக்கொண்டார்கள். நாம் சிக்கவில்லை. இதுதான் உண்மை.
கொழும்பு மாநகரசபை தேர்தலில் எமது கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனால், கொழும்பு மாவட்டத்தில் தெகிவளை, கொலோன்னாவை, அவிசாவளை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுகிறது. நாடு முழுக்கவும் இருபதுக்கும் மேற்பட்ட சபைகளில் நமது கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுகிறது. பதினான்கு சபைகளில் நாம் தனித்து ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். இதில் ஒன்றுதான் கொழும்பு மாநகரசபை.
கொழும்பில் நாம் தனித்து போட்டியிட்டு எங்கள் வாக்குகளை நாம் பெற்றுக்கொள்ள போவதுதான் ரவி கருணாநாயக்கவின் இன்றைய பிரச்சினை. இதற்கு என் மீது கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை. இந்நிலை உருவானதற்கு காரணமே இவர்தான். இது ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து மட்ட தலைவர்களுக்கும் தெரியும். ஆகவே கொழும்பில் நாம் ஏன் தனித்து போட்டியிடுகிறோம் என்ற காரணத்தை தேடுபவர்கள் அதை ரவி கருணாநாயக்கவிடம்தான் கேட்க வேண்டும்.
இது அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் இல்லை. இது உள்ளூராட்சி குட்டி தேர்தல். அதனால்தான், நமது கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளும் நாடு முழுக்க சில இடங்களில் சேர்ந்தும், சில இடங்களில் தனித்தும் போட்டியிடுகிறோம். நாங்கள் அனைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள். அதில் எந்த மாற்றமும் இல்லை.
தனித்து போட்டியிடும் ஒரே கட்சியின் ஒரே தலைவர் மனோ கணேசன் என்று, ரவி கருணாநாயக்க காட்டப்பார்க்கிறார். இது ஒரு அநாகரீகமான வெட்கங்கெட்ட பொய். பாராளுமன்ற தேர்தலில் சேர்ந்தும், மாநகரசபையில் தனித்தும் போட்டியிடுவதை ஒரு தவறாக காட்டவும் அவர் முயல்கிறார். நாங்கள் யாரும் ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் அல்ல. நாம் ஐக்கிய தேசிய முன்னணிகாரர்கள். இந்த அரசியல் அறிவு இவருக்கு இல்லை. இது எங்கள் உரிமை. அதுதான் ஒரு தனி கட்சி என்பதன் அடையாளம். பாராளுமன்ற தேர்தலில் நாடெங்கும் நாம் சேர்ந்து போட்டியிடுவது இரு தரப்புக்கும் சாதகமானது என்ற அடிப்படையில், நானும், என் கூட்டணியின் சக பிரதி தலைவர்களும், ஐதேக தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி முடிவு செய்கிறோம். இதுபற்றி ரவி கருணாநாயக்கவிடம் நாம் பேசுவதில்லை. அதற்கு அவசியமில்லை. அதேபோல் தனித்து போட்டியிடுவதும் எங்கள் உரிமை. இதுபற்றி பேச ரவி கருணாநாயக்க யார்?