தமிழகத்தில் 7-வது நாளாக இன்றும் பேருந்து ஓட்டுனர்களின் பணிப்புறக்கணிப்பு நீடிக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த 4-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்க ஊழியர்களுடன், தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அப்போதும் குறைந்த அளவிலான பேருந்துகளே செல்வதால் போக்குவரத்து முடங்கி உள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து இன்று 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்காததால், போக்குவரத்துதொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இன்றும் பெரும்பாலான பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகள் இல்லாததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ என மாற்று போக்குவரத்தை நாடி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.