பாராளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வுகளின் போது பாராளுமன்றில் அமளிதுமளி நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலில் பத்து நிமிடங்களுக்கு பாராளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்பட்டு கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 6.30 வரையில் பாராளுமன்ற அமர்வுகளை நடாத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தiமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் – தள்ளுமுள்ளு – மோதல்- ஒருவர் காயம்…
Jan 10, 2018 @ 08:02
பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றிய வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, அமளியில் ஈடுபட்டுள்ளனர்
பாராளுமன்ற மத்தியில் கூடிய அவர்கள் கள்ளன் கள்ளன் வங்கிக் கள்ளன், ரணில் கள்ளன்.. போன்ற கூச்சல்களை எழுப்பினர். மேலும் இவர்கள் சில பதாகைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர். இதேவேளை, இச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் சிறு கைகலப்பும் ஏற்பட்டதாக தெரியவருகிறது. அத்துடன், அமைச்சர் ஒருவர் தகாத வார்த்தைகளை இதன்போது பிரயோகித்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஆளும்கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களே இவ்வாறு முரண்பாட்டில் ஈடுபட்டதோடு, இதனைத் தடுக்க பிரதமர் தலையிட்டுள்ளார். இந்தநிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் சொய்சா சிறு காயங்களுக்கு உள்ளானதோடு, அவருக்கு பாராளுமன்ற வளாகத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.